ஈரோட்டில் சினிமா இயக்குனர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில் சினிமா இயக்குனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் சினிமா இயக்குனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை -பணம் திருட்டு
ஈரோடு நாடார் மேடு கெட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவ ஹரிகேசவா என்கிற மோகன்குமார் (வயது 45). இவர் அக்னி, தீமைக்கும் நன்மை செய், இடரினும் தளரினும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர், மனைவியுடன் வெளியே சென்றால் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணியில் சுற்றி ஜன்னல் ஓரத்தில் வைத்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 21-ந்தேதி மோகன்குமார் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, மனைவியுடன் சென்னை சென்றார். பின்னர் 23-ந்தேதி வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பீரோவில் இருந்த நகையை பார்த்துள்ளார். அப்போது 5¾ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும், சந்தேகம் வராதபடி கதவை திறந்து நகையை திருடிவிட்டு மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்துச்சென்றதும் தெரியவந்தது.
வாலிபர் கைது
இது குறித்து மோகன்குமார் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருடைய மகன் தமிழரசு (23) என்பதும், அவர் தான் சினிமா இயக்குனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று தமிழரசுவை கைது செய்தனர்.