சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில்குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்


சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில்குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:46 PM GMT)

சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என 5 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேங்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே மேகமலை வனப்பகுதி புலிகள் சரணலாயமாக அறிவிக்கப்பட்டதால், குழாய் உடைப்பு சீரமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த 22 மாதங்களாக மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மதுரை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் இரவங்கலாறு அணை பகுதியில் வால்வூ ஹவூஸ் என்ற இடத்தில் 220 மீட்டர் தூரத்திற்கு குழாய் சீரமைக்க கடந்த ஜனவரி மாதம் மின் வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது, ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்து மீண்டும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கயத்தாறு மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Related Tags :
Next Story