ஈரோடு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
ஈரோடு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அங்காள பரமேஸ்வரியம்மன்
ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி அம்மனுக்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கருவறை முழுவதும் தேடி பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சியை போலீசார் பார்வையிட்டனர். அதில், கோவிலின் பூசாரி கருவறையில் அலங்கார பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது, பக்தரைபோல வாலிபர் ஒருவர் கோவிலுக்கு வந்துள்ளார். அவர் நைசாக கருவறைக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்து நகையை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மனின் கழுத்தில் இருந்த நகையை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.