சீட்டு நடத்திய பெண்ணின் வீட்டில் ரூ.35 லட்சம் துணிகர கொள்ளை

திருமங்கலத்தில் சீட்டு நடத்திய பெண்ணின் வீட்டில் புகுந்து ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் சீட்டு நடத்திய பெண்ணின் வீட்டில் புகுந்து ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஏலச்சீட்டு நடத்திய பெண்
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 36). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
ஜெயந்தி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ஏலச்சீட்டுக்காக வசூல் செய்த பணம் மற்றும் இடம் வாங்குவதற்காக உறவினர்களிடம் கடனாக வாங்கிய பணம் உள்பட ரூ.35 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் ஜெயந்தி, திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது வீடு பூட்டி இருந்தது.
ரூ.35 லட்சம் கொள்ளை
அவரது வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் பார்த்த போது ஜெயந்தி குடியிருக்கும் வீட்டின் பின்பக்க வாசல் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு தகவல் அளித்தனர்.
வீட்டுக்கு வந்து ஜெயந்தி பார்த்தபோது, பின்கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், பீரோவில் வைத்திருந்த ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஜெயந்தி திருமங்கலம் ேபாலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருமங்கலம் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய், அருகில் உள்ள தெருவழியாக கண்மாய் பகுதி நோக்கி ஓடிச்சென்று நின்றுவிட்டது.
தனிப்படை விசாரணை
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் நகர் போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர்.
ஜெயந்தியிடம் இவ்வளவு பணம் இருந்தது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் ெதரிய வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உறவினர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.






