தேனி புதிய பஸ் நிலையத்தில்ரூ.20 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள்:'வெயில் அடிக்கும்' மேற்கூரையால் பயணிகள் அதிருப்தி

தேனி புதிய பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. புதிய மேற்கூரை அமைக்கப்பட்ட நிலையில் கூரைக்கு கீழ் வெயில் அடிப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
தேனி புதிய பஸ் நிலையத்தில்ரூ.20 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள்:'வெயில் அடிக்கும்' மேற்கூரையால் பயணிகள் அதிருப்தி
Published on

பராமரிப்பு பணிகள்

தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பெயரில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பஸ் நிலையத்தில், நடைமேடை பகுதிகளில் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சேதம் அடைந்தது. பயணிகள் மழை பெய்தால் நனைவதும், வெயில் அடித்தால் பரிதவிப்புடன் நிற்பதுமாக இருந்தனர். இந்த பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் இந்த பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி பணிகள் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. தற்போது நடைமேடை பகுதியில் சேதம் அடைந்த பழைய மேற்கூரை அகற்றப்பட்டு புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் அதிருப்தி

கண்ணாடி போன்று அமைக்கப்படும் மேற்கூரையால் வெயில் அப்படியே தரையில் விழுகிறது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மேற்கூரைக்கு கீழே நிற்பதை பயணிகள் தவிர்த்து ஆக்கிரமிப்பால் சுருங்கிய நடைபாதையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். புதிதாக அமைக்கப்படும் மேற்கூரைக்கு கீழ் வெயில் அடிப்பதால் இந்த பணியின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது பாலிகார்பனேட் ஷீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்படுகிறது. இதில் பல வண்ணங்கள் உள்ளன. நாம் வெள்ளை நிற ஷீட்டுகளை பொருத்துகிறோம். இது கண்ணாடி போன்று ஒளியை ஊடுருவச் செய்து பஸ் நிலையத்தை பிரகாசமாக மாற்றும். பல இடங்களில் இது பயன்பாட்டில் உள்ளது. புதிதாக அமைப்பதால் வெயில் அடிப்பது போன்று இருக்கும். சில நாட்களில் சரியாகி விடும். வெயில், மழை என அனைத்து பருவக் காலத்திற்கும் இந்த மேற்கூரை உகந்ததாக இருக்கும்' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com