திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கையால் பரபரப்பு
திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
குழந்தையை மாடு முட்டியது
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே மணிநகரை அடுத்த காந்திபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தியா (வயது 23), சிந்தியா (21). இவர்கள் அக்காள்- தங்கை ஆவர்.
நேற்று முன்தினம் சந்தியாவின் 1½ வயது பெண் குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான மாடு முட்டியது. இதில் குழந்தை காயமடைந்தது.
அக்காள்-தங்கை மீது தாக்குதல்
இதுகுறித்து சந்தியா, மாட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சந்தியாவும், சிந்தியாவும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் இரவில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது அவர்களிடம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
பின்னர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்துக்கு சென்ற இருவரும் திடீரென்று தங்களது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிச்சென்று, அக்காள்-தங்கையின் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, சந்தியா, சிந்தியாவை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் அக்காள்-தங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.