பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டிஎம். எந்திரத்தை உடைத்த வாலிபர்
என் பேச்சை மனைவியும் கேட்பதில்லை...! நீயும் கேட்க மாட்டியா...! என்று கூறி பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டிஎம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
கடலூர் பாரதிசாலை- சில்வர் பீச் சாலை சந்திப்பு சிக்னல் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையில் இந்த ஏ.டி.எம். மையம் உள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வங்கி மேலாளர் சந்தனகுமாரும் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் தொடுதிரை உடைக்கப்பட்டு இருந்தது.
மனைவியுடன் கருத்து வேறுபாடு
இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த வாலிபர் ஒருவர், திடீரென அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் கம்மியம்பேட்டையை சேர்ந்த அய்யனார் மகன் மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது.
மேலும் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து புகார் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் கடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.
வாலிபர் கைது
இதையடுத்து அவர், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தன் பேச்சை மனைவியும் கேட்பதில்லை...! நீயும் கேட்கமாட்டியா...! என்று கூறியபடி அதை உடைத்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை வாலிபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.