அட்சய திருதியை: காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.. அலைமோதிய கூட்டம்


அட்சய திருதியை: காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.. அலைமோதிய கூட்டம்
x

கோப்புப்படம்

சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னை,

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று தங்க நகைகள் அல்லது நாணயம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டில் திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இந்த ஆண்டு இன்றும், நாளையும் என 2 நாட்கள் காலையில் திருதியை நாளாக கணக்கிடப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. வாடிக்யைாளர்களும் காலை முதலே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்கி வருகின்றனர். அனைத்து நகைக் கடைகளிலும் காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. தங்க நாணயம் வாங்க வந்தவர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் நகை வாங்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை வாங்கி வருகின்றனர்.


Next Story