திண்டுக்கல் கலெக்டரின் கார்,அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி


திண்டுக்கல் கலெக்டரின் கார்,அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி
x

நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் கலெக்டரின் கார், அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள வேலுநாச்சியார் பெருவளாகம் கட்டுவதற்கு கடந்த 1985-ம் ஆண்டு 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக 40-க்கும் மேற்பட்டோர் நிலம் கொடுத்தனர். இந்த நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கொடுத்தவர்கள், கூடுதல் தொகை கேட்டு திண்டுக்கல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஏக்கருக்கு ரூ.1 லட்சமும், 15 சதவீத வட்டியும் வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, ஏக்கருக்கு ரூ.2½ லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு உறுதி செய்யப்பட்டது.

ஜப்தி செய்ய முயற்சி

ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நிலம் கொடுத்தவர்கள், திண்டுக்கல் சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி, கலெக்டரின் கார் உள்பட 13 வகையான அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் கலெக்டர் விசாகன் காரில் வந்தார். ஆனால் அவருடைய கார் வழக்கமான இடத்தில் நிறுத்தப்படவில்லை. இதனால் கோர்ட்டு ஊழியர்கள், கார் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். எனவே பிற பொருட்களை ஜப்தி செய்ய முடிவு செய்தனர்.

பேச்சுவார்த்தை-பரபரப்பு

இதை அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள், கோர்ட்டு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று உறுதிஅளித்தனர். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இந்த சம்பவத்தால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பும், இதேபோல் கோர்ட்டு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story