சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சி 'ரவுடி மதுரை பாலா, டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம்' - கைதானவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்


சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சி ரவுடி மதுரை பாலா, டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம் - கைதானவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்
x

ரவுடி மதுரை பாலா டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம், என்று அவரை சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சித்து கைதானவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாலா என்ற பாலமுருகன் (வயது 30). கூலிப்படை கும்பல் தலைவனாக செயல்பட்ட இவர், சென்னை பல்லாவரம், தென்னேரி பகுதியில் தற்போது வசித்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி அன்று, சென்னை அசோக்நகர் பகுதியில் மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் என்பவர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். அந்த வழக்கில் மதுரை பாலா முக்கிய குற்றவாளி ஆவார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மதுரை பாலா, வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ரவுடி சிவகுமார் கொலை வழக்கு விசாரணைக்காக, மதுரை பாலாவை நேற்று முன்தினம் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேலூர் ஆயுதப்படை போலீசார் போலீஸ் வேனில் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் வைத்து, மதுரை பாலாவை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொல்ல முயற்சித்தனர். இதில் மதுரை பாலா மயிரிழையில் உயிர் தப்பினார். பாலா மீது நடந்த கொலை வெறி தாக்குதலில், அவருடன் காவலுக்கு வந்த பாரதி என்ற போலீஸ்காரர் காயம் அடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலாவை கொல்ல முயன்ற கும்பலைச் சேர்ந்த சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அருண், அப்துல் மாலிக் ஆகிய 3 பேரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விக்கி, விக்கி பாய் என்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட சக்திவேல், அருண், அப்துல் மாலிக் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.

பாலா அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் கூட்டாளி ஆவார். கூலிக்கு கொலை செய்யும் தொழிலை தொடங்கிய பாலா அதன்பிறகு பெரிய ரவுடி ஆகிவிட்டார். அரும்பாக்கம், அமைந்தகரை பகுதியில் பாலா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. இது அதே பகுதியைச்சேர்ந்த அப்பாஸ், சக்திவேல் போன்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தனர். இது பற்றி சிறையில் இருந்த பாலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்ட பாலா, அப்பாசை தட்டி வைக்க தனது கூட்டாளிகளிடம் கூறினார்.

இந்த தகவல் அப்பாசுக்கு தெரியவந்தது.

பாலாவின் ஆட்கள் போட்டுத்தள்ளுவதற்கு முன்பு, பாலாவை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது போட்டுதள்ள அப்பாஸ் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

தங்களது திட்டப்படி, வேனை விட்டு இறங்கியதும், அப்பாவி போல நடித்த அப்பாஸ் தனியாக போய் டீ சாப்பிட்டுக்கொண்டு பேசலாம், என்று பாலாவை அழைத்ததாக தெரிகிறது. ஆனால் பாலா டீ வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இதனால் வேறு வழியின்றி போலீசார் முன்னிலையில், சக்திவேல் பெப்பர் ஸ்பேரையை தெளித்து விட்டு, அந்த சந்தடி சாக்கில் பாலாவை வெட்ட முயற்சித்தனர். ஆனால் பாலா மீது வெட்டு விழவில்லை. போலீஸ்காரர் பாரதி கையில் விழுந்து விட்டது. பாலா டீ குடிக்க வந்திருந்தால், அவரை தீர்த்துக்கட்டி இருப்போம், என்று கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல், அருண், அப்துல் மாலிக் ஆகியோர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அப்பாஸ் உள்பட மேலும் 3 பேர் பிடிபட்டால்தான் இந்த சம்பவத்தில் முழு உண்மையும் வெளி வரும், என்றும் போலீசார் கூறினார்கள்.


Next Story