பழனி முருகன் கோவில் கோசாலை நிலத்தில் சிப்காட் அமைக்க முயற்சி; எச்.ராஜா குற்றச்சாட்டு


பழனி முருகன் கோவில் கோசாலை நிலத்தில் சிப்காட் அமைக்க முயற்சி; எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2023 9:00 PM GMT (Updated: 11 July 2023 9:00 PM GMT)

பழனி முருகன் கோவில் கோசாலை நிலத்தில் சிப்காட் அமைக்க முயற்சி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் கோசாலை நிலத்தில் சிப்காட் அமைக்க முயற்சி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.

கோசாலை

பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசு தான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மத சார்புடையதுதான். அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள பல மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு

பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது இந்து மக்களுக்கு சொந்தமானது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சினையாக இல்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது கேலிக்குரியது. பா.ம.க. தொண்டர் வெட்டிக்கொலை, 50 விசாரணை கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதல்-அமைச்சருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சி.பி.ஐ. நுழையுமோ? என்ற அச்சம்.

குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக அவரை மருத்துவமனையில் வைத்துள்ளனர். அமைச்சருக்கு என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன்?, சட்டத்தை மதிக்காமல் முதல்-அமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story