இளம்பெண்ணுடன் தலைமறைவான ஆட்டோ டிரைவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணை 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
முதல் மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணை 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டார்.
2-வது திருமணம்
மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜின்குமார் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சந்தியா (34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தியா கணவரை பிரிந்து, பாகோட்டில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜின்குமார் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு கேரளாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த 2-வது திருமணம் செய்ய விஜின்குமாருக்கு போதகர் பிரின்ஸ், களியலை சேர்ந்த சிவகுமார், கொடுங்குளத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
இது தொடர்பாக விஜின்குமாரின் முதல் மனைவி சந்தியா கொடுத்த புகாரின் பேரில் விஜின்குமார் மற்றும் பிரின்ஸ், சிவகுமார், சுரேஷ் ஆகிய 4 பேர் மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே விஜின்குமார் 2-வது திருமணம் செய்த 18 வயது இளம்பெண்ணின் பெற்றோர், மகளை காணவில்லை என்று கூறி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து விஜின்குமார் இளம்பெண்ணுடன் தலைமறைவானார். அவரை மார்த்தாண்டம் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது விஜின்குமார் சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று விட்டு இறுதியாக வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி சென்று அங்கு லாட்ஜில் தங்கியிருந்த விஜின்குமாரை இளம் பெண்ணுடன் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மார்த்தாண்டம் அழைத்து வந்த போலீசார் விஜின்குமாரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். நேற்று அவரை மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.