அவலாஞ்சியில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது:ஊட்டியில் படகு சவாரி ரத்து-சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்


தினத்தந்தி 7 July 2023 1:00 AM IST (Updated: 7 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அவலாஞ்சியில் 2-வது நாளாக 20 சென்டிமீட்டர் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மேலும், ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நீலகிரி

ஊட்டி

அவலாஞ்சியில் 2-வது நாளாக 20 சென்டிமீட்டர் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மேலும், ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கனமழை

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேர் ஊட்டிக்கு வந்தனர். இதேபோல் கோவை, ஈரோடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு படையினர் வந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி 4-ந்தேதி நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

20 சென்டிமீட்டர் மழை பதிவு

நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்த மழை காரணமாக 8 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 2 வீடுகள் சேதம் அடைந்தது. ஒருவர் படுகாயம் அடைந்தார்.

2-வது நாளாக நேற்றும் அவலாஞ்சியில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கொளப்பள்ளி முதல் எடத்தாள் வரை செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவர் சரிந்துள்ளது. பந்தலூர் வட்டம் கொளப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் என்னுமிடத்தில் நடைபாதையின் குறுக்கே விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. மேலும், கூடலூர் -பாட்டவயல் சாலையின் குறுக்கே விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பில் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் ஆங்காங்கே சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

ஓவேலி நியூஹோப் சாலை பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மரத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றினர்.

படகு சவாரி ரத்து

2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதற்கிடையே தாவரவியல் பூங்காவில் மட்டும் சுற்றுலா பயணிகள் மழையை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி பூங்கா புல்வெளிகளை கண்டு ரசித்தனர்.

ஊட்டியில் நேற்று 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக இருந்தது.

இந்த மழை நீடித்தால் உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கரில் வாழைகள் சேதமடைந்துள்ளன.

பந்தலூரில் போக்குவரத்து பாதிப்பு

பந்தலூர், மேங்கோகோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு உள்படதாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று பாட்டவயல,் பிதிர்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பாலவயல் என்ற இடத்தில் மின்கம்பம் மேல் மரம்சாய்ந்தது. இதனால்மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு சென்று, மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story