நாட்டு ரக அவரை சாகுபடிக்கு மானியம்
உடுமலை பகுதியில் பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
அதிக மகசூல்
மண்ணையும் மனிதர்களையும் நேசித்த நமது முன்னோர்கள் தொழு உரம், பாரம்பரிய நாட்டு ரக விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்தனர். இதன் மூலம் விளையும் விளைபொருட்களை சாப்பிட்ட மனிதர்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். அத்துடன் தாங்கள் விளைவித்த விளைபொருட்களிலிருந்தே விதைகளை சேகரித்து சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தினர். ஆனால் பசுமைப் புரட்சிக்கு பின்பு விவசாயம் என்பது அதிக மகசூல் என்ற ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டது.
இதனால் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். இதனால் விதைகளை சேகரிக்க முடியாத மலட்டு ரகங்களே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் படிப்படியாக நமது பாரம்பரிய ரகங்கள் அழிவை நோக்கித்தள்ளப்பட்டு விட்டன.
பாரம்பரிய ரகங்கள்
நமது முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள மண் வளத்துக்கு ஏற்ற விதைகள், பருவத்துக்கு ஏற்ற விதைகள், வறட்சியான பகுதிக்கு ஏற்ற விதைகள் என ஒவ்வொரு பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ற விதைகளைப்பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக கத்தரியை எடுத்துக்கொண்டால் நெகமம் வரி கத்தரி, உடுமலை சம்பா கத்தரி, காரமடை கத்தரி, ஒட்டன்சத்திரம் பச்சைக்கத்தரி, பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி என்று பகுதிக்கு ஏற்ற ரகங்களைப் பயிரிட்டு வந்தனர். இதனால் இழப்பு இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால் இன்றைய நவீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதில் ஆர்வம் காட்டும் பலரும் நமது பாரம்பரிய ரகப் பயிர்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுப்பதில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழக அரசும் கைகொடுக்கிறது. பாரம்பரிய நாட்டு ரகங்களை சாகுபடி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி உடுமலை பகுதியில் பாரம்பரிய ரக அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா தெரிவித்துள்ளார்.