நோய் தாக்கி அவரை உற்பத்தி பாதிப்பு
நோய் தாக்கி அவரை உற்பத்தி பாதிப்பு
அருள்புரம்
பல்லடம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டை, அவரை உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள், பயிர்கள் பயிரிடப்படுகிறது. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவரையை நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் கூறியதாவது:- ஒரு ஏக்கருக்கு உழவுக்கு ரூ.5 ஆயிரம், ஒரு ஏக்கருக்கு அவரை விதை நல்ல விதையாக இருந்தால் 5 பொட்டலங்கள் போதும். ஆனால் தரமற்ற விதைகளால் 8 பொட்டல விதைகளை நடவு செய்து உள்ளேன். ஒரு பாக்கெட் விலை ரூ.300-ம். அதனை நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும் செலவு ஆகின்றன. தற்பொழுது நடவு செய்து 2 மாதங்கள் ஆகிறது. தரமற்ற விதைகளால் ஒரு வாரத்திற்கு உரம் மற்றும் மருந்து ரூ.3 ஆயிரம் வீதம் இதுவரைக்கும் ரூ.20 ஆயிரம் செலவு ஆகியுள்ளது. தற்பொழுது ஒரு கிலோ அவரை ரூ.40-க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.60-க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். தரமற்ற விதைகளால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் யாரும் உரக்கடைகளில் ஆய்வு செய்வதில்லை. இதனால் விவசாயிகள் வாங்கும் பல பொருட்கள் தரமற்றதாக இருக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரமற்ற பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.