வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கமுன்னாள் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு


வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கமுன்னாள் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 25 Oct 2023 3:10 PM GMT (Updated: 26 Oct 2023 4:59 PM GMT)

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க முன்னாள் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நோட்டீசு அனுப்பினார்.

திருப்பூர்

சேவூர், அக்.26-

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 23 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட நிதியிழப்பு தொடர்பாக அப்போதைய நிர்வாக குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழுவுக்கு விளக்கம் கேட்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நோட்டீசு அனுப்பினார்.

கூட்டுறவு விற்பனை சங்கம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் பிரதானமாக உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் என நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. கடந்த 2001 -2002-ல் விற்பனைச்சங்க செயல்பாடுகள் இறுதித் தணிக்கை செய்யப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது. இந்த விசாரணை அறிக்கைபடி சங்கத்தின் நிர்வாக குழுவின் தவறான நிர்வாக நடவடிக்கையால் சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதுதொடர்பாக திருப்பூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன் முன்னாள் நிர்வாக குழு தலைவர் நிர்வாக குழு இயக்குனர்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சங்கத்துணை விதிப்படி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரொக்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சங்கத்தில் நடக்கும் பருத்தி ஏலத்தில் பங்கெடுப்பவர் கடன் முறையில் சரக்குகளை எடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது. கடன் விற்பனை கூடாது என நிர்வாக குழுவுக்கு அப்போதைய மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆனால் நிர்வாக குழுவினர் கடன் தருவதை நிறுத்தாமல் தொடர்ந்து கடன் தரலாம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கடன்தொகை

இந்தநிலையில் கடன் கொள்முதல் அனுமதித்ததால் காட்டன் கொள்முதல் செய்யும் சில நிறுவன உரிமையாளர்கள் சங்கத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை நிலுவை வைத்தனர்.

அவ்வகையில் 1.78 கோடி ரூபாய் சங்கத்துக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சங்கத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொறுப்பாகிறார்கள். எனவே அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின்படி இந்த சங்கத்திலோ பதிவுபெற்ற வேறெந்த கூட்டுறவு நிறுவனத்திலும் இனிமேல் எந்த பதவியும் வகிக்க முடியாதபடி ஏன் நிரந்தர தகுதி இழப்பு செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவினாசி கூட்டுறவு விற்பனைச்சங்க முன்னாள் தலைவர் சாமிநாதன் (தி.மு.க.) கூறியதாவது:-

கடிதம் அனுப்பி உள்ளோம்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய தணிக்கை அறிக்கை படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நிர்வாக குழுவினருக்கோ, தலைவருக்கோ காசோலை கையாளும் அதிகாரம் இல்லை. அதிகாரிகளுக்கு தான் காசோலை வழங்கும் அதிகாரம் இருந்தது. அதிகாரிகள் தான் வசூல் செய்திருக்க வேண்டும். கூட்டுறவு விற்பனை சங்கம் தொடங்கப்பட்டது முதலே கடன் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே கடன் வழங்கப்பட்டு தான் இருந்தது. நிர்வாகக் குழுவினர் ஆலோசனைகள் மட்டுமே சொல்ல முடியும். இறுதி முடிவு அதிகாரிகள் தான் எடுப்பார்கள். கடன் கொடுப்பதும் வசூல் செய்வதும் அதிகாரிகள் தான். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க ஏதுவாக குறிப்பிட்ட ஆண்டுகளில் பணிபுரிந்து அதிகாரிகள், நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என 18 கேள்விகளை முன் வைத்து அதற்கு விளக்கம் கேட்டு கூட்டுறவு இணை பதிவாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என கூறினார்.


Next Story