வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு விருதுவிண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசிநாள்
வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு விருது பெற விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், அனைத்து பெண் குழந்தைகளும் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்தல், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் பெண்களுக்கு சாதனையாளர் விருது ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தில் பாராட்டு பத்திரமும், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் கடலூர் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது பெற தகுதியான பெண் சாதனையாளர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே வீரதீர செயல்புரிந்து வரும் பெண்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.