விலங்கினால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு
விலங்கினால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள தீவு கிராமமான மேல ராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார பொது சுகாதாரத்துறையின் சார்பில் அரசு விலங்கினங்களால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கு பொறுப்பு தலைமை ஆசிரியை க்ளோரி கிரிஸ்டினாள் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் விழிப்புணர்வு வழங்கினார். இதில் விலங்குகள் கடிப்பதாலோ, அவற்றின் உமிழ்நீர் மற்றும் சிறுநீர் மூலமாகவோ மனிதர்களுக்கு ரேபிஸ், எலிக்காய்ச்சல், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களை பரப்பும் உயிர்க்கொல்லி வைரஸ்கள் பரவி நோய்களை உருவாக்குகின்றன. ஆகவே வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து ஆடு, மாடு, நாய் மற்றும் பூனை முதலான விலங்கினங்களுக்கு முறையான தடுப்பூசி போட்டிட வேண்டும். மேலும், நாமும் கவனமுடன் வீட்டு விலங்கினங்களை கையாள வேண்டும். மிருகங்கள் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து உலக விலங்கின நோய் எதிர்ப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.