தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

சுயமரியாதை, சமதர்ம கருத்துகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவின் நினைவாக ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள், மேயர் பிரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இது அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதர். இந்த மணிமண்டபம் அறிவொளி இல்லமாக அமைந்துள்ளது. இந்த சிலையை திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்தி தாசர். தமிழ் அல்லது திராவிடம் மொழி மட்டும் அல்ல, அது ஒரு பண்பாட்டு நடைமுறையாக மாற்றியவர் அயோத்தி தாசர். 1907-ம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கி, அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர்.

சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத்தக்கவர். அயோத்திதாச பண்டிதர் தீண்டாமைக்கு எதிரான சிந்தனைகளை வளர்த்தெடுத்து, சுயமரியாதை, சமதர்ம கருத்துகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story