ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்.. ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு


ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்.. ரத்தம் சிந்தியதால் நடை அடைப்பு
x

வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க இருக்கும் நிலையில், கோவில் வளாகத்தில் ரத்தம் சிந்தியது அபசகுனமாக கருதப்பட்டது.

ஸ்ரீரங்கம்:

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இன்று காலையில் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டபடி ரங்கநாதரை வழிபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் பாதுகாப்பு ஊழியர்கள், கோஷம் போடாமல் அமைதியாக தரிசனம் செய்ய வேண்டும் என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, பாதுகாப்பு ஊழியர்கள் சேர்ந்து அய்யப்ப பக்தர்களை தாக்கியுள்ளனர். இதில் ஒரு பக்தர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

கோவிலுக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து, நடந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அந்த இடத்திலேயே மற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, காயமடைந்த ஐயப்ப பக்தரை தனியாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் தினமும் இதுபோன்று நடக்கிறது. கோவிலுக்குள் ரவுடிகள் இருக்கிறார்கள். இன்று மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இது அபசகுனம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று இரவு திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க இருக்கும் நிலையில், கோவில் வளாகத்தில் ரத்தம் சிந்தியது அபசகுனமாக கருதப்பட்டது. இதனால், கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது. பரிகார பூஜைக்கு பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


Next Story