பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பொள்ளாச்சி,
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காட்டாற்று வெள்ளம்
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து பரம்பிக்குளத்திற்கு வினாடிக்கு 6,034 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 66.40 அடியாக உயர்ந்து உள்ளது.
அப்பர் ஆழியாறில் இருந்து வினாடிக்கு 2,403 கன அடி தண்ணீர் ஆழியாறு அணைக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காண்டூர் கால்வாய் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 2,738 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 102.40 அடியாக உயர்ந்தது.
மின் கம்பங்கள் சாய்ந்தன
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழைக்கு இடையே வீசிய சூறாவளி காற்று காரணமாக பொள்ளாச்சி பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மரக்கிளைகள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. தொடர் மழையின் காரணமாக பி.ஏ.பி. திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- சோலையார்-54, பரம்பிக்குளம்-20, ஆழியாறு-2.5, வால்பாறை-35, மேல்நீராறு-66, கீழ்நீராறு-44, காடம்பாறை-8, சர்க்கார்பதி-5.60, மணக்கடவு-20, தூணக்கடவு-21, பெருவாரிபள்ளம்-35, அப்பர் ஆழியாறு-4, நவமலை-2, பொள்ளாச்சி-24.






