புலி தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு: உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டம்


புலி தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு: உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டம்
x

குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுத்து தாய் யானை பாச போராட்டம் நடத்தியது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று மதியம் குட்டியுடன் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி திடீரென குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. இதை எதிர்பார்க்காத தாய் காட்டு யானை குட்டிக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்து புலியை விரட்டியது. தொடர்ந்து புலி அங்கிருந்து சென்றது.

புலி தாக்கியதில் குட்டி யானை படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதனால் தாய் யானை கண்ணீருடன் செய்வதறியாது தவித்தது. அந்த வழியாக வாகனங்கள் சென்றதால், ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை வாகனங்களை விரட்டியது. தகவல் அறிந்த கர்நாடக வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது குட்டி யானை இறந்தது தெரியவந்தது. அதன் அருகே தாய் யானை சோகத்துடன் நின்றபடி தும்பிக்கையால், குட்டியின் உடலை வருடியது. பின்னர் கர்நாடக வனத்துறையினர் தாய் யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுத்து தாய் யானை பாச போராட்டம் நடத்தியது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முதுமலை-பந்திப்பூர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தாய் யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்பட்டது.


Next Story