பொக்லைன் எந்திர டிரைவரை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்


பொக்லைன் எந்திர டிரைவரை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
x

பொக்லைன் எந்திர டிரைவரை கடத்தி சென்று ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக திட்டக்குடியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

பொக்லைன் எந்திர டிரைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சக்திவேல்(வயது 42). பொக்லைன் எந்திர டிரைவரான இவருக்கு திருமணமாகி ஐஸ்வர்யா என்ற மனைவியும், கார்த்திகேயன், சிவமணி என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி புலிக்கரம்பலூரை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் பொக்லைன் எந்திர டிரைவராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். ஆனால் முறையாக சம்பளம் தராததால் சக்திவேல் வேலையை விட்டு நின்று விட்டதாகவும், அவர்களுக்கிடையே சம்பள பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

4 மர்மநபர்கள்

சம்பவத்தன்று காலை சக்திவேல் கூகையூரில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்மநபர்கள் சக்திவேலிடம், லட்சுமணபுரம் ரோட்டில் பொக்லைன் எந்திரம் ஒன்று கவிழ்ந்து விட்டது அதை மீட்டுத்தர வேண்டும் என்றனர். இவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பிய சக்திவேல் மர்மநபா்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் வள்ளியம்மாள் மன பதற்றத்துடனே இருந்தார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையே அன்று இரவு வள்ளியம்மாளின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் சக்திவேலை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ.5 லட்சம் தந்தால் உன் மகனை விடுவித்து விடுவோம். மாறாக போலீசுக்கு போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதன்பிறகே சக்திவேலை மர்மநபர்கள் கடத்தி சென்று இருப்பது தொியவந்தது. இதுகுறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் வள்ளியம்மாள் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

8 பேர் கைது

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சக்திவேலுக்கும், பரமசிவத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது தொியவந்துள்ளது. இதையடுத்து பரமசிவத்தின் பிடியில் இருந்த சக்திவேலை போலீசார் மீட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடா்பாக பொக்லைன் எந்திர உரிமையாளர் பரமசிவம், கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ரமேஷ்(36), ஜெகதீஷ்(23), ராபிட்(19), பெரியசாமி(23), சந்திரன்(20), திட்டக்குடி வெற்றிச்செல்வன்(19), தனராஜ்(42) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story