பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருக்கும் வங்கி தேர்வு: தேர்வர்கள் சிரமம்


பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருக்கும் வங்கி தேர்வு: தேர்வர்கள் சிரமம்
x

கோப்புப்படம் 

15-ந்தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி முதன்மை தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரதான வங்கியாக செயல்படும் ஸ்டேட் வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. ஸ்டேட் வங்கியில் உள்ள 5,300 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலை தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வு வருகிற 15-ந்தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளில் முதன்மை தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது. அதனை கவனிக்காமல் வங்கி தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் அனைவரும் இருப்பதால் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும். அதனால் 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி முதன்மை தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனை வங்கி தேர்வை நடத்தும் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story