கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்


கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
x
தினத்தந்தி 17 July 2022 5:46 PM GMT (Updated: 17 July 2022 5:53 PM GMT)

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளர் கோகிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு பொது நிகழ்ச்சிகள், திருவிழா காலங்களில் நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வர முறையான பஸ் வசதி செய்துதர வலியுறுத்துவது, திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனுக்காக சிமெண்டு சாலை, கழிப்பறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story