ஆந்திராவில் தடியடி திருவிழா: 2 பேர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்


ஆந்திராவில் தடியடி திருவிழா: 2 பேர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்
x
தினத்தந்தி 25 Oct 2023 5:30 AM GMT (Updated: 25 Oct 2023 5:37 AM GMT)

ஆந்திராவில் விஜயதசமியை முன்னிட்டு நடந்த தடியடி திருவிழாவில் 2 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறுகிறது.

கல்யாண உற்சவம் முடிவடைந்த பின்னர், உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வது வழக்கம். இதில் வெற்றிபெறும் குழுவைச் சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்துச் செல்வார்கள்.

இந்த நிலையில், மல்லீஸ்வரர் கோயிலில் கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தடியடி திருவிழா நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து கைகளில் தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த தடியடி உற்சவத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஊர் மக்கள் ஏற்க மறுத்து உற்சவத்தை நடத்திவருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story