'அரசு வேலைவாய்ப்பில் கருணை காட்டுங்கள்':குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் உருக்கம்


அரசு வேலைவாய்ப்பில் கருணை காட்டுங்கள்:குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் உருக்கம்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 12:09 PM GMT)

'அரசு வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு கருணை காட்டுங்கள்' என்று தேனியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் உருக்கமாக தெரிவித்தனர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் தேனியை சேர்ந்த திருநங்கை ஆராதனா கூறும்போது, 'நான் போலீஸ் பணியில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயதில் இருந்து இருக்கும் ஆசை. இதற்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் என்னை அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கவில்லை.

இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது, எனக்கு ஒரு பணியிடம் ஒதுக்கிட கோர்ட்டு உத்தரவிட்டது. 8 வாரத்துக்குள் எனக்கு தேர்வு முறைகள் நடத்தி பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு இன்னும் போலீஸ் வேலை கிடைக்கவில்லை. எனவே எனக்கு அரசு வேலைவாய்ப்பில் கருணை காட்டுங்கள். திருநங்கைகள் போராடி தோற்றுப் போகிறோம்' என்றார்.

கருணை காட்டுங்கள்

தேனியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா கூறும்போது, 'நான் பட்டப்படிப்பு படித்தும் எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. திருநங்கைகள் பலர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் கருணை காட்டுங்கள். அரசு வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்றார்.

சின்னமனூரை சேர்ந்த திருநம்பி அருண் கூறும்போது, 'அரசு பஸ்சில் திருநங்கைகள், திருநம்பிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பஸ் கண்டக்டர்கள் திருநம்பிகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கின்றனர். இதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அவமானப்படுத்தப்படுகிறோம். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் ரேஷன் கார்டு பெற முடியாமல் தவிக்கிறேன்' என்றார்.

மேலும் இக்கூட்டத்தில் உதவித்தொகை சில மாதங்களாக கிடைக்காமல் உள்ளதாகவும், உயர்த்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருநங்கைகள் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், 'உயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதத்தில் இருந்து நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும். வேலைவாய்ப்பு தொடர்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். திருநம்பிகளுக்கு தனியாக பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Related Tags :
Next Story