"மழைக்காலத்துக்கு முன்பாக வாறுகால்-சாலை சீரமைக்கப்படும்" -மேயர் பி.எம்.சரவணன் தகவல்


மழைக்காலத்துக்கு முன்பாக வாறுகால்-சாலை சீரமைக்கப்படும் -மேயர் பி.எம்.சரவணன் தகவல்
x

மழைக்காலத்துக்கு முன்பாக வாறுகால், சாலை சீரமைக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசினார்.

திருநெல்வேலி

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம், மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், ''பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கியதற்கும், உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று அறிவித்ததற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம். தசரா திருவிழா கொண்டாடப்பட உள்ள கோவில்களைச் சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலத்துக்கு முன்பாக மாநகர பகுதியில் உள்ள வாறுகால்கள், சிறுபாலங்கள், சாலைகள் சீரமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்'' என்றார்.

குடிநீர் திட்டம்

கூட்டத்தில் மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா பேசுகையில், ''மேலப்பாளையம் மண்டலத்துக்கு நிரந்தரமாக ஒரு உதவி கமிஷனர் மற்றும் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும்'' என்றார்.

பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசுகையில், ''முறப்பநாடு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? அதுகுறித்து தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

உடனே ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''நெல்லை மாநகராட்சிக்கு 2 உதவி கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சியில் சுமார் ரூ.1,600 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி விட்டது. முறப்பநாடு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்'' என்றார்.

நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ஜெகநாதன், சந்திரசேகர், ரசூல் மைதீன், அமுதா, சின்னத்தாய், சங்கீதா, ஆமினா பீவி, முத்து சுப்பிரமணியன், அனுராதா உள்ளிட்டவர்களும் தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர்.

நன்றி

கடந்த சில கூட்டங்களில் மேயர்- கவுன்சிலர்கள் இடையே பிரச்சினைகள் எழுந்த நிலையில், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி நேற்று அமைதியான முறையில் கூட்டம் நடந்தது. 2 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் மேயர் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் மேயர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக முன்னாள் கவுன்சிலர் காந்திமதி மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முற்றுகை

கூட்டம் முடிந்ததும் கவுன்சிலர்கள் சிலர் மாநகராட்சி அலுவலக வாசல் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை செல்போனில் வீடியோ எடுத்தார். உடனே அந்த நபரிடம் இருந்து செல்போனை பிடுங்கி விட்டு அங்கிருந்த கவுன்சிலர்கள் தாக்க முயன்றனர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் மேயர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டத்தைெயாட்டி, வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story