நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்தது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முன்கூட்டியே அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீராக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.48 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story