பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி


பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி
x

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி பெரம்பலூரில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

3 பிரிவுகளாக சைக்கிள் போட்டி

முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வருகிற 17-ந்தேதி காலை 7 மணி அளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின்படி போட்டி நடைபெறவுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

போட்டி 3 பிரிவுகளாக ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்படும். 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.1.2010, 15 வயதிற்குட்பட்டவர்கள் 1.1.2008, 17 வயதிற்குட்பட்டவர்கள் 1.1.2006 அன்றோ அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும், சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாரண சைக்கிளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்துதல் கூடாது.

வயது சான்றிதழ்

மாணவ-மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழ்களுடன் வந்தடைதல் வேண்டும். வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். தங்களது ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். சைக்கிள் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புக்கோ பங்கு பெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும், என்று ஒப்புதல் அளிக்க வேண்டும், இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சைக்கிள் போட்டி 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டருக்கும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டருக்கும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டருக்கும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டருக்கும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டருக்கும் நடைபெறும்.

பரிசு தொகை

சைக்கிள் போட்டி நடைபெற இருக்கும் தடங்கள் போட்டி நடைபெறும் முன்பு தெரிவிக்கப்படும். இப்போட்டியில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் பரிசு தொகையாக காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழிமுறைகள் மூலமாகவோ வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story