பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி


பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

அரியலூர்

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நேற்று காலை நடந்தது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள சாலையில் நடந்த இந்த சைக்கிள் போட்டியை கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15, 17 வயதுகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 120 மாணவர்களும், 82 மாணவிகளும் என மொத்தம் 202 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சைக்கிள் போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும் காசோலைகளாகவும், சான்றிதழையும் மற்றும் 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் காசோலைகளாகவும், சான்றிதழையும் கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கி பாராட்டினார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் ராமசுப்ரமணியராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story