இரை தேட குவிந்த நாமக்கோழி பறவைகள்


இரை தேட குவிந்த நாமக்கோழி பறவைகள்
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:45 PM GMT)

மாவட்டத்திலுள்ள பறவைகள் சரணாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வரும் நிலையில் திருஉத்தரகோசமங்கை கண்மாயில் இரை தேடுவதற்காக நாமக்கோழி பறவைகள் குவிந்துள்ளன.

ராமநாதபுரம்

திருஉத்தரகோசமங்கை,

மாவட்டத்திலுள்ள பறவைகள் சரணாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வரும் நிலையில் திருஉத்தரகோசமங்கை கண்மாயில் இரை தேடுவதற்காக நாமக்கோழி பறவைகள் குவிந்துள்ளன.

சரணாலயங்கள்

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயம், நயினார் கோவில் அருகே தேர்த்தங்கல், சாயல்குடி அருகே மேல செல்வனூர், முதுகுளத்தூர் அருகே காஞ்சிரங்குளம், சித்தரங்குடி உள்ளிட்ட 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறவைகள் வரத்தொடங்கும்.

இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயங்களில் உள்ள மரக்கிளைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குஞ்சுகளுடன் திரும்பி செல்லும்.

கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மாவட்டத்தில் ேபாதிய மழை பெய்யாததால் பறவைகள் சரணாலயங்களுக்கு பறவைகள் வரத்தே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரத்தால் தண்ணீர் இருப்பிருந்து வருவதால் ஓரளவு பறவைகள் வந்துள்ளன.

நாமக்கோழி பறவைகள்

இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள கண்மாயில் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய் பெருகி தண்ணீர் இருப்புடன் காட்சியளித்து வருகின்றது. கண்மாயில் தண்ணீர் அதிகம் உள்ளதால் நாமக்கோழி என்று சொல்லக்கூடிய பறவைகள் கண்மாயில் இரை தேடுவதற்காக குவிந்துள்ளன.

கூட்டம் கூட்டமாக கண்மாய் நீரில் நீந்தியபடி மீன்களை கொத்தி தின்பதையும், தண்ணீரின் மேல் பறந்து செல்வதையும் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இது பற்றி வனத்துறையினர் கூறும்போது, தாழை கோழியை விட நாமக்கோழி சற்று பெரிதாக இருக்கும். உடல் கருப்பு, அலகு வெள்ளை, நெற்றியில் உள்ள கேடயம் வெள்ளையாக இருக்கும். கால்கள் நீரில் நீந்துவதற்கு ஏற்றவாறு தட்டையான சாம்பல் நிற விரல்களை கொண்டிருக்கும். இளம் பறவைகளின் அலகு கருப்பாகவும், முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதியில் வெள்ளையாகவும் இருக்கும். குஞ்சு பறவைகளின் தலையில் பொன்னிற தூவிகள் இருக்கும். அலகு சிவப்பாக இருக்கும்.

குவிந்துள்ளன

ஆழம் குறைந்த நீரில் உயரமான புற்கள் அல்லது தாவரங்களுக்குள் மேடை அமைத்து ஆண், பெண் இரண்டும் சேர்ந்து கூடு கட்டும். 6 முதல் 10 முட்டைகள் வரையிடும் நாமக்கோழி பறவைகள் கூட்டமாக நீரில் நீந்தி கொண்டிருப்பதை பார்க்கலாம்.

நீரில் உள்ள நீர் தாவரங்களின் குருத்துகள், விதைகள், பாசிகள், நீர் வாழ் பூச்சிகள், தவளை, சிப்பி, மீன் முட்டைகள் உள்ளிட்டவைகளை இந்த நாமக்கோழி பறவைகள் உணவாக உட்கொள்ளும் என்றார். அதேபோல் இந்த கண்மாயில் நீர்காகம், வெள்ளை நிற கொக்கு, சாம்பல் நிற நாரை உள்ளிட்ட பறவைகளும் குவிந்துள்ளன.


Next Story