பா.ஜனதா, இந்து முன்னணியினர் திடீர் போராட்டம்
நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மைய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அப்போது பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளை சந்தித்து வழங்கினார்கள்.
பா.ஜனதா தச்சநல்லூர் பிரசார பிரிவு தலைவர் பாலகங்காதர திலகர், மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். ஆனால் அங்கு மேயர், துணை மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் யாரும் மனு வாங்குவதற்கு இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாநகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'நெல்லை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரும் சமீபகாலமாக கூட்டத்துக்கு வருவதில்லை. சாதாரண அதிகாரிகள் மட்டுமே மனுக்களை வாங்குகிறார்கள். இந்த நடைமுறை தொடர்ந்தால் கடும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
இதையடுத்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார். அவரிடம் பா.ஜனதா கட்சியினர் கொடுத்த மனுவில், 'கொக்கிரகுளம் மாநகராட்சி பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அதை இடித்து விட்டு புதுப்பித்து தருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளி தற்சமயம் வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்' என்று தெரிக்கப்பட்டு இருந்தது.
விநாயகர் வேடம் அணிந்து
நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சங்கர் தலைமையில் பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜசெல்வம் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அதில் ஒருவர் விநாயகர் போன்று வேடம் அணிந்து வந்தார்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். வேடம் அணிந்து மனு அளிக்க கூடாது என்று கூறினார்கள். இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் கோவில்கள் இருந்தன. அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பஸ் நிலையம் கட்டுவதற்காக, பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டது. அப்போது மாநகராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் மீண்டும் 2 விநாயகர் கோவில்கள் கட்டித்தரப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பஸ் நிலைய கட்டுமான பணி முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது. எனவே 2 விநாயகர் கோவில்களையும் மீண்டும் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாய் தொல்லை
மிலிட்டரி லைன் ஜமாத் இளைஞர் அணியினர் கொடுத்த மனுவில், 34-வது வார்டு பகுதியில் வெறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிக்காக கட்டிப்போட்டிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறிவிட்டது. மேலும் சிறுவர்கள் நடமாடவிடாமல் துரத்துகிறது. தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், பொதுச் செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் காளிசாமி, தச்சநல்லூர் பகுதி செயலாளர் முருகன் ஆகியோர் வந்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், 'தச்சநல்லூர் மண்டலம் சந்திப்பு சிந்துபூந்துறை முதல் உடையார்பட்டி வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதான மெயின் ரோட்டில் இந்த சாலை அமைப்பதால் மழைக்காலத்தில் பொது மக்கள் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கோவில் தேர் சப்பரங்கள் செல்வதற்கும் சிரமமாக இருக்கும். எனவே பேவர் பிளாக் சாலைக்கு பதிலாக சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
பாளையங்கால்வாயில் துணி சலவை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜ், வக்கீல் காசி, கந்தசாமி, ராஜா, சுதன், கந்தசாமி ராஜா ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பாளையங்கால்வாய்க்கு வந்தனர். அங்கு ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரில் வெள்ளை சட்டையை சலவை செய்தனர். அதனால் கருப்பு நிறத்துக்கு மாறிய அந்த சட்டையுடன் நெல்லை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து பாளையங்கால்வாயின் சுகாதார கேடு குறித்து எடுத்து கூறி, அதனை சரி செய்யுமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.