அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீச்சு


தினத்தந்தி 13 Aug 2022 8:43 PM GMT (Updated: 13 Aug 2022 8:44 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் காத்திருந்து அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

மதுரை

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் காத்திருந்து அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

ராணுவ வீரர்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மதுரை மாவட்டம் தும்மகுண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.

லட்சுமணனின் உடலானது, ஐதராபாத் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 12 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

தமிழக அரசு சார்பில் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்தில் பழைய முனையம் பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே, சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்தில் புதிய முனையம் பகுதியில் அவர் காத்திருந்தார். அவரின் வருகையை அறிந்தும், அஞ்சலி செலுத்தவும் பா.ஜனதாவினர் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர்.

பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசு சார்பில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் வந்தார். அங்கு பா.ஜனதா கட்சியினர் கூடி இருப்பதை அறிந்து. அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள்தான் முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மற்றவர்கள் ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தலாம் என அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடலுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்தலாம் என்று கூறி அமைச்சருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் ஓடிவந்து சமாதானப்படுத்த முயற்சித்தனர். பா.ஜ.க.வினர்-போலீசாரிடையே தள்ளுமுள்ளு உருவானது.

கூடுதல் பாதுகாப்பு

ஏற்கனவே விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இருந்த நிலையில், உடனடியாக கூடுதலாக மத்திய படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினரிடம் போலீசார், ராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ வீரரின் உடலுக்கு அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுப்பதாக தெரிவித்தனர்.

இதன்பின்பே ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக அமைத்த பந்தலுக்கு கொண்டு வரப்பட்டது. முதலில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், அய்யப்பன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் உமாமகேசுவரன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதுபோல், ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செருப்பு வீச்சு

இதனை தொடர்ந்து, ராணுவ வீரர் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, டி.புதுப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரமுகர்களின் வாகனங்கள் வரிசையாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தன.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் வந்தபோது, பா.ஜ.க.வினர் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது காரை மறித்து முற்றுகையிட முயன்றனர். திடீரென அவரது காரின் மீது செருப்பு வீசப்பட்டதால் மீண்டும் பரபரப்பு உருவானது. அந்த செருப்பானது காரின் முன்பகுதியில் கிடந்தது. உடனே போலீசார் விரைந்து வந்து, பா.ஜனதா கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அமைச்சர் பயணித்த கார் அங்கிருந்து செல்ல வழி ஏற்படுத்தினர். அதைதொடர்ந்து அமைச்சர் உள்ளிட்டோரின் கார்கள் விமான நிலையத்தில் இருந்து சென்றன.


Related Tags :
Next Story