

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நினைவு நாள்
சேலத்தில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் மறைந்த ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மரவனேரியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு லட்டர் மேல் லட்டர் போட்டதால் தான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி உள்ளார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1000-ம் யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மிச்சமாகும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆனால் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக முதலில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மத்திய அரசின் மானியம் கிடைக்காது என்று மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி உள்ளார்.
குறுக்கு வழி
தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 746 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறவில்லை. தி.மு.க. அரசு எடுத்த குறுக்கு வழி தான் மின்கட்டண உயர்வு.
எனவே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தை இயங்கவிடாமல் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிப்படை தன்மையுடன் சரியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
அனல் மின்நிலையங்களில் தற்போது உள்ள 60 சதவீத மின் உற்பத்தியை 80 சதவீதமாக உயர்த்த வேண்டும். மின்தட்டுப்பாட்டை போக்க 24 மணி நேரத்தில் வீடுகளில் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்தவும், நிறுவனங்களில் 48 மணி நேரத்தில் சோலார் பேனல் பொருத்தவும் அனுமதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் போலீஸ் டி.ஜி.பி. முரண்பாடான தகவல்களை தெரிவிக்கிறார். எனவே போலீஸ் துறை கம்பீரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.