கர்நாடகத்தில் மதம் சார்ந்த அரசியலே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - மதுரை மாநாட்டில் திருமாவளவன் பேச்சு


மதம் சார்ந்த அரசியலால்தான் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தது என மதுரையில் நடந்த மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசினார்.

மதுரை


மதம் சார்ந்த அரசியலால்தான் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தது என மதுரையில் நடந்த மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசினார்.

மதுரை மாநாடு

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் சார்பில் மாநாடு பழங்காநத்தம் பகுதியில் நடந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். என்பது வேறல்ல. பா.ஜ.க.வை தனித்த அரசியல் கட்சியாக எண்ண முடியாது. அவை இரண்டும் இரட்டை குழந்தைகள். சராசரி அரசியல் கட்சியாக பா.ஜ.க.வை பார்க்க முடியாது. பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடுகளை தீர்மானிக்க கூடியது, பா.ஜ.க.வினுடைய மையக்குழுவோ, தேசிய குழுவோ தலைமை குழுவோ அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தான் அதனை தீர்மானிக்கிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய தலைவர்கள்.

செயல் திட்டம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த முடிவின் அடிப்படையில் செயல் திட்டங்களை வரையறுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மாதம் என்ன செயல் திட்டம் என்று கேட்டால் கூட நாம் சொல்ல முடியாது. இது போல் தான் மற்ற கட்சிகளும் இருக்கிறது. ஆனால் பா.ஜனதாவின் செயல் திட்டம் பற்றிய ஒரு கணிப்பு அவர்களுக்கு இருக்கிறது.

பா.ஜ.க. மதம் சார்ந்த உணர்வுகளை கையில் எடுத்துள்ளது. அவர்கள் மிக லாவகமாக காய்களை நகர்த்துகின்றனர். சாதாரண மக்களின் மதம் சார்ந்த உணர்வுகளை வைத்து, இந்து பெரும்பான்மையை நிரூபிக்க பார்க்கிறார்கள். ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே ஆட்சி இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும், இந்தியா பல்வேறு மாநிலங்களாக பிரிந்து இருப்பதை விரும்பாமல் இருக்கின்றனர். மாநிலங்கள் பிரிந்து இருந்தால் பல மொழிகள், பல மதங்கள் இருக்கும். இதனால் அவர்கள் நினைப்பது போல் புதிய இந்தியாவை கட்டமைக்க முடியாது என நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தோல்விக்கு காரணம் யார்?

அரசுக்கு மதம் வேண்டாம் என காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கூறினார்கள். ஆனால் மதம் சார்ந்த அரசியலை அமைப்போம் என ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. இதனுடைய வெளிப்பாடு கர்நாடகா தேர்தலிலும் எதிரொலித்தது. அதன் காரணமாக பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. கர்நாடகாவில் உள்ள மக்களை பல்வேறு விஷயங்களில் குழப்பி பார்த்தார்கள். ஆனால் மக்கள் தெளிவாக வாக்களித்து விட்டனர். பா.ஜ.க.வின் தோல்விக்கு அங்குள்ள இந்துக்கள் முக்கிய காரணம். அவர்கள்தான் அதிக அளவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தனர். கிட்டத்தட்ட 40 சதவீத இந்துக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன், மே 17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பேசினர். இதில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் முகமது கவுஸ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


Next Story