ஊட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்


ஊட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2023 9:15 PM GMT (Updated: 21 Oct 2023 9:16 PM GMT)

ஊட்டியில் புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டு புத்தகங்களை வாங்குகின்றனர்.

நீலகிரி

ஊட்டியில் புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டு புத்தகங்களை வாங்குகின்றனர்.

புத்தக திருவிழா

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், புத்தக திருவிழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புத்தகம் எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. முறையாக எழுத வேண்டும் என்றால், அதற்கு பல புத்தகங்களை படித்திருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்கும் போது, அதனை எழுதியது யார், என்ன கருத்துகள் கூறியுள்ளார் என்பதை கவனமாக படித்து அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த விலையில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கிறது. வள்ளுவர், திருவாசகம் மற்றும் சித்தர் பாடல்களை படிக்கலாம். சமத்துவம், சகோரத்துவத்தை உணர்த்தும் புத்தகங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.

நல்வழி காட்டும்

புத்தகத்தோடு பயணிப்பவர்களுக்கு புத்தகம் நல்ல வழியை காட்டும். எனவே, புத்தக வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற புத்தக கண்காட்சி சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சியை தமிழக அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கல்வி தான் நம்மை தூக்கி நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, கவிஞர் சீனு ராமசாமி மற்றும் எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள்

நேற்று 2-வது நாளாக புத்தக திருவிழா நடந்தது. இதில் நடிகர் பொன்வண்ணன் கலந்துகொண்டு பேசினார். புத்தக திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வருகிற 29-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. அனைத்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

புத்தக திருவிழாவில் உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் இடம்பெற்று உள்ளன. மாணவா்கள், பொதுமக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் கட்டணம் இன்றி பங்கேற்கலாம்.


Next Story