அரியக்குடியில் தயாராகும் பித்தளை அகல் விளக்குகள்


அரியக்குடியில் தயாராகும் பித்தளை அகல் விளக்குகள்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:47 PM GMT)

காரைக்குடியில் பித்தளையால் அகல்விளக்கு செய்யும் பணி நடைபெற்று வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் பித்தளையால் அகல்விளக்கு செய்யும் பணி நடைபெற்று வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருநாள்

கார்த்திகை தீப திருநாள் என்பது இந்துக்களின் முக்கிய விழாவாக உள்ளது. அன்றைய தினம் வீடுகள் முழுவதும் பெண்கள் அகல் விளக்கேற்றி ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் அன்றைய தினம் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கார்த்திகை தீப திருநாள் அன்று மண் விளக்கு மற்றும் பித்தளை விளக்குகளில் பெண்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இன்று(செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் பித்தளை விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுவாக அரியக்குடி பகுதியில் தயாராகும் பித்தளை பொருட்கள் உலகம் முழுவதும் நல்ல பெயர் உண்டு. மேலும் இங்குள்ள பித்தளை பொருட்கள் நல்ல தரமானதாகவும், அதிக எடையும் கொண்டதால் பல ஆண்டுகளாக உழைத்து நீடிக்கும் தன்மை கொண்டது. இந்நிலையில் காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் பட்டறைகளில் பித்தளை பொருட்கள் செய்யும் பணி குடிசை தொழிலாக நடைபெற்று வருகிறது. இங்கு பித்தளை மூலம் சிறிய குத்து விளக்கு பெரிய அளவிலான குத்துவிளக்குகள், அகல் விளக்குகள், மணிகள், அலங்கார பொருட்கள், சுவாமி சிலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த கால சீசனுக்கு ஏற்றவாறு இங்கு பித்தளையால் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அகல் விளக்குகள்

இந்தநிலையில் தற்போது கார்த்திகை திருநாளையொட்டி இங்கு அகல் விளக்கு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழில் ஈடுபட்டுள்ள அரியக்குடியைச் சேர்ந்த மாரிக்கண்ணு கூறியதாவது:-

இங்கு தயாரிக்கப்படும் பித்தளை பொருட்கள் கெட்டியாகவும், அதிக எடை கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த பொருட்கள் அதிக வருடம் உழைக்கும் தன்மை கொண்டது. எத்தனை ஆண்டுகளானாலும் கருக்காது. இதன் காரணமாக இங்குள்ள பித்தளை பொருட்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்.

மேலும் இங்கு யானை விளக்கு, பாவை விளக்கு, கேரளா பகுதியில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆமை வடிவ விளக்கு, ஓம் வடிவ விளக்கு, அன்னம் விளக்கு, குமுளி விளக்கு, 1,4 மற்றும் 5 முக விளக்கு, அகல் விளக்கு, சர விளக்கு, லெட்சுமி விளக்கு, காமாட்சி விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, செடி விளக்கு, அஷ்ட விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீப திருநாள் சீசன் காலத்தில் அகல்விளக்குகள் தயாரிப்பு பணி அதிகரிக்கும். அந்த வகையில் இந்தாண்டும் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இந்த விளக்குகள் திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story