ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிலைகள் உடைப்பு-ஆவணம் எரிப்பு


ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிலைகள் உடைப்பு-ஆவணம் எரிப்பு
x

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு, ஆவணம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பாடாலூர்:

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம்.

இதில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

சிலைகள் உடைப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் பூஜை முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில், இந்த கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் கோவிலில் பணிகளை மேற்கொள்வதற்காக தூய்மை பணியாளர் தவமணி வந்தார். அவர் கோவிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் இருக்கும் சிறிய கதவை திறக்க முயன்றபோது, அந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள வாகன மண்டபத்தின் அருகில் இருந்த 3 அடி உயரம் கொண்ட முருகன் சிலையும், பைரவர் சிலையும் மற்றும் கருடாழ்வார் மர வாகனமும், 4 அடி உயரம் கொண்ட சிங்க வாகனமும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பழைய ஆவணங்களும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.

கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகள்

இது குறித்து அவர் கோவிலின் செயல் அலுவலர் ஹேமாவதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்து பார்வையிட்டு, பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு ேகமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

அதில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒருவர் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, சாமி சிலைகளை அடித்து உடைத்த காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்த கோவில் பராமரிப்பு தொடர்பான பழைய பதிவேடுகளை அவர் எடுத்து வந்து, கோவிலில் உள்ள அணையா விளக்கில் இட்டு எரித்ததும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் பெரம்பலூர் மாவட்டம், மாவலிங்கை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து, விசாரணை நடத்தினா்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் அந்த கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு, ஆவணங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story