வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகைகள் திருட்டு போனது.
திருவெறும்பூர்:
நகைகள் திருட்டு
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி(வயது 65). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு ராமநாதபுரத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து கடந்த 9-ந் தேதி இரவு அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த வளையல், தாலி, தங்க நாணயம், தோடு உள்ளிட்ட 5½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்தவர் கைது
*புள்ளம்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமாரின் மகன் சுபாஷ்(வயது 23). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டிற்கு வந்தபோது புள்ளம்பாடி யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் அருகே 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர், அவரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, கல்லக்குடி அருகே ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள கல்குவாரி பகுதியில் தலைமறைவாக இருந்த விஜயராஜை, நேற்று சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் கைது செய்தார்.
*திருச்சி மேலகல்கண்டார்கோட்டை நாகம்மாள் வீதி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(73). இவர் ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் சுதர்சன்(38) என்பவர், ஜெயக்குமாரை திட்டி தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, சுதர்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மீது மோதிய பஸ்
*தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி ஜோதி(45). இவர் கோடியம்பாளையம் கருப்புசாமி கோவில் அருகே திருச்சி-நாமக்கல் சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பஸ் டிரைவர் முசிறி அருகே உள்ள மூவேலி பகுதியை சேர்ந்த பிரபாகரன்(31) மீது தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.