நகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


நகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x

அறந்தாங்கியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

நகைக்கடைகள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரின் முக்கிய கடை வீதியாக பெரியக்கடைவீதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள், நகை அடகு மற்றும் நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.

பெரியக்கடை வீதியில் தியாகி சீனிவாசன் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40), கோட்டை சிவன் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் (60), வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (50), அறந்தாங்கி வைரம் நகரை சேர்ந்த கண்ணன் (60) ஆகிய 4 பேரும், நகைக்கடைகள் வைத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

இந்நிலையில் இன்று காலை பெரியக்கடை வீதியில் உள்ள நகைக்கடை, அடகு கடை உள்ளிட்ட 4 நகைக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கடை உரிமையாளர்கள் மற்றும் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், போலீசார் மற்றும் கடை உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், கார்த்திகேயன் நகைக்கடையில் இருந்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்து 800 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் 3 கடைகளிலும் நகைகள் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அறந்தாங்கி நகரில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story