கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ், கார், ஷேர் ஆட்டோ அடுத்தடுத்து மோதல்; 5 பேர் காயம்


கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ், கார், ஷேர் ஆட்டோ அடுத்தடுத்து மோதல்; 5 பேர் காயம்
x

கல்பாக்கம் அருகே கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ், கார், ஷேர் ஆட்டோ என அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை கல்பாக்கம் வழியாக அதிவேகத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கல்பாக்கம் அருகே கூவத்தூர் என்ற இடத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பஸ் மீது நிலைத்தடுமாறி கார் மோதியது.

இதில் அரசு பஸ் சாலையோரம் வலது பக்கம் உள்ள பள்ளத்தில் இருந்த கால்வாயில் பாய்ந்தது. அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஒன்றும் திடீர் பிரேக் போடப்பட்டதால் காரின் பின் பக்கம் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ மோதியதில் காரின் முன் பகுதியும், பின் பகுதியும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் லேசான காயமடைந்தனர். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர். பிறகு இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் மற்றும் ஆட்டோவில் வந்து காயமடைந்த 5 பேரை மீட்டு கூவத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு, கூவத்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் புதுச்சேரி அரசு பஸ்சில் பயணம் செய்த யாரும் காயம் ஏற்படவில்லை. கார், பஸ், ஷேர் ஆட்டோ என அடுத்தடுத்து மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தை முன்னிட்டு கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story