நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்க திட்டம்


நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்க திட்டம்
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பஸ் நிலையம்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதன் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இருந்த போதிலும் பொது மக்கள் நலன் கருதி, சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் டவுன் பஸ்கள் மட்டும் வந்து பயணிகளை அழைத்துச்செல்ல சமீபத்தில் திறக்கப்பட்டது.

ஏற்கனவே சந்திப்பு பஸ் நிலையம் செயல்பாட்டில் இருந்த போது தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், கடையம் புறநகர் பஸ்கள் மற்றும் டவுன் மார்க்கமாக செல்லும் டவுன் பஸ்கள் தேவர் சிலை முன்பு 'யு' வளைவில் திரும்பி மேற்கு நோக்கி செல்லும். ஆனால் சந்திப்பு பஸ் நிலையம் மூடிக்கிடந்த போது தேவர் சிலை 'யு' வளைவு மூடப்பட்டது. வாகனங்கள் அங்குமிங்கும் நேராக செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

போக்குவரத்து நெருக்கடி

இந்த நிலையில் சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்கு பஸ்கள் வந்து செல்வதால், 'யு' வளைவு அவசியம் தேவைப்படுகிறது. ஏனென்றால் தற்போது பாளையங்கோட்டை பகுதியில் இருந்து டவுன் நோக்கி செல்லும் பஸ்கள் கொக்கிரகுளத்தை கடந்து சந்திப்பு பஸ் நிலையத்துக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து டவுனுக்கு செல்வதற்காக மீண்டும் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்று அங்கு வலதுபுறமாக திரும்பி மீண்டும் தேவர் சிலை, அண்ணா சிலை வழியாக செல்கிறது.

இதனால் சந்திப்பு -கொக்கிரகுளம் இடையே தேவையில்லாத போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து ஆய்வு நடத்துவதற்கு குழு அமைத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், சாலை பாதுகாப்பு அலுவலர் சசிகலா, பொறியாளர்கள் லட்சுமி பிரியா, சண்முகசுந்தரம், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் காமேசுவரன், இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் நேற்று நெல்லை சந்திப்பு பகுதியில் ஆய்வு செய்தனர்.

அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைத்து, சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்களை திருப்பி விடலாமா? என்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து தேவர் சிலை அருகில் ஏற்கனவே பஸ்கள் திரும்பி சென்றது போல், மீண்டும் திருப்பி விடலாமா? அவ்வாறு பஸ்கள் திரும்பும் போது எளிதாக திரும்பும் வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் தற்போது வாகனங்கள் திரும்பி செல்லும் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியிலும் அதிகாரிகள் அங்குள்ள போக்குவரத்து நெருக்கடி தொடர்பாக பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து, பஸ்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

இன்று சோதனை ஓட்டம்

கலெக்டர் உத்தரவுப்படி இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அதாவது அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரமும், தேவர் சிலை பகுதியில் சிறிது நேரமும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில் எந்த பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்கிறதோ, அங்கு 'யு' வளைவு அமைத்து டவுன் மார்க்கமாக பஸ்கள் நிரந்தரமாக திரும்பி செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story