பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பொங்கல் கரும்பு
பொங்கல் என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது கரும்பு ஆகும். கரும்பை தோரணமாக்கி, நடுவில் பொங்கல் பானை வைத்து பொங்கி வரும் பொங்கலும், தோரணமாக இருக்கும் கரும்பும் திகட்டாத இனிப்பை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை கவனத்தில் கொண்ட தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு வழங்கியது.
இந்தக் கரும்பானது கூட்டுறவு சங்கங்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த பகுதி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அரசு பொங்கல் தொகுப்புக்காக கரும்புகளை கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
அறுவடைக்கு தயார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகாவில் லட்சக்கணக்கான கரும்புகள் நடவு செய்யப்பட்டு தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு தேவை என்பதால் அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் வராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:-
மணப்பாறை அருகே உள்ள சுப்புராயன்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி:-
தற்போது கரும்பு நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு எங்களை போன்ற விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்தால் எங்களின் துயர் நீங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த அறிவிப்பும் வராதது வேதனையாக உள்ளது. ஆகவே அரசு கரும்பை எங்களிடம் இருந்து கொள்முதல் செய்திட வேண்டும்.
வேறு விவசாயம் செய்யாமல்...
கலிங்கப்பட்டியை சேர்ந்த பாண்டியன்:-
மற்ற பயிர்கள் போல் கரும்பு குறுகிய கால பயிர் கிடையாது. கரும்புக்கு 8 மாதம் என்று சொன்னாலும் முன்னதாகவே அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒரு வருடம் வேறு எந்த விவசாயமும் செய்திட முடியாது. இந்த முறை அரசு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். அரசு கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால் எங்கள் நிலைமை மோசமாகிவிடும். விறகுக்கு கூட கரும்பு உதவாத நிலை ஏற்பட்டு விடும்.
சுப்புராயன்பட்டியை சேர்ந்த அடைக்கல சாமி:-
அரசு கரும்புகளை எப்படியாவது கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி கரும்புகளை நடவு செய்துள்ளோம். கரும்புகளை அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே கடனில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியும். தற்போது, அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கண்ணீரோடு காத்திருக்கிறோம். எனவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புக்காக மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.