கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு


கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி  நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு
x

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் கார் சிறைபிடிக்கப்பட்டது.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதி அருகில் இருப்பதால் அந்த பகுதி வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 10 நாட்களாக கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது நிரந்தரமாக சர்வீஸ் ரோடு வேண்டும் என கூறினர். வாய்மொழியாக நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஒப்புதல் தெரிவித்தார். இதற்கு வாகன ஓட்டிகள் எழுத்துப்பூர்வமாக வேண்டும் என்றனர்.

மேலும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திட்ட இயக்குனர் காரை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் சரியான முடிவு தரவில்லை எனில் தேர்தலை புறக்கணிப்பதோடு வாக்காளர் அடையாள அட்டை முதல் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரியிடம் பேசி முடிவு எடுப்பதாக தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் தெரிவித்த பின்பு காரை விடுவித்தனர்.


Next Story