மழைநீரில் மிதக்கும் கார்கள்... கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்..!


மழைநீரில் மிதக்கும் கார்கள்... கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்..!
x
தினத்தந்தி 4 Dec 2023 8:13 AM GMT (Updated: 4 Dec 2023 8:45 AM GMT)

வேளச்சேரி புதிய மேம்பாலம் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.

சென்னை,

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன.

இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன.

அதைபோல சென்னை குன்றத்தூரில் அருகில் உள்ள வட்டக்குப்பட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், மழைநீரில் இருந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காப்பதற்காக மக்கள் மேம்பாலத்தில் தங்களது வாகனங்கள் நிறுத்திவைத்துள்ளனர். மேம்பாலத்தின் ஒருபுறம் கார்கள், மறுபுறம் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வேளச்சேரி புதிய மேம்பாலம் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.


Next Story