லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்


x
தினத்தந்தி 22 March 2023 5:09 AM GMT (Updated: 22 March 2023 11:57 AM GMT)

அதிமுக பொதுச்செயலாளர், தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் பரபரப்பு வாதங்கள் தற்போது நடைபெற்று வருகீறது.


Live Updates

  • 22 March 2023 11:57 AM GMT

    அதிமுக வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

  • 22 March 2023 11:33 AM GMT

    "மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை" - அதிமுக தரப்புவாதம்

    இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது.

    52 ஆண்டுகால அதிமுகவில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவிதான் இருந்துள்ளது. இடையில் 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இருந்தன. உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு.

    கட்சியில் ஆதரவில்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. கட்சி முடிவு செய்த நிபந்தனைகளை நீதிமன்ற சட்ட விரோதம் எனக் கூற முடியாது. உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. பெங்களூரு புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கும் மு எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்று அதிமுக வாதங்களை முன்வைத்து வருகிறது.

  • 22 March 2023 10:35 AM GMT

    பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க முடியாது - அதிமுக தரப்பு வாதம்

    கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதில் நிறைவேறிய தீர்மானங்களை குறை கூறமுடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்கும் நோக்கில் கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்ப்பட்டுள்ளது என அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  • 22 March 2023 10:28 AM GMT

    ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து; காலாவதி அல்ல - அதிமுக வாதம்

    ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை. திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழு முடிவுகளே இறுதியானது; இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீசும் இல்லாமல் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

    ஒபிஎஸ் தரப்பை நீக்க காரணம் என்ன? - அதிமுக பதில்

    கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 பொதுக்குழுவில் ஒபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும் அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்தால் நீக்கம் என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

  • 22 March 2023 10:11 AM GMT

    "எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்" - ஈபிஎஸ் தரப்பு வாதம்

    அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பு வாதம் நிறைவு பெற்றதையடுத்து ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

    ஓபிஎஸ் தனக்கென தனிக்கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார் : நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்.

    பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தரப்பு தான் உண்மையான கட்சி என்றால், தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

  • 22 March 2023 9:29 AM GMT

    ஒற்றை தலைமை: ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து முடிவெடுக்க முடியும் - வைத்திலிங்கம் தரப்பு

    அதிமுக வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, வைத்திலிங்கம் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

    ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது என வைத்திலிங்கம் தரப்பு வாதிட்டு வருகிறது.

    பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில், விளக்கம் கேட்காமல் தன்னை நீக்கியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது.

  • 22 March 2023 8:53 AM GMT

    அதிமுக வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியது

    அதிமுக வழக்கில் வைத்திலிங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

  • 22 March 2023 8:00 AM GMT

    அதிமுக வழக்கு மதியம் 2.15 மணிக்கு தொடரும்

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் பரபரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்.

    இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரிய வழக்கின் விசாரணை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • 22 March 2023 7:13 AM GMT

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

    பொதுச்செயலாளர் பதவிக்காக ஈபிஎஸ்-க்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு முன் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை.

    கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற தயார் என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

  • 22 March 2023 6:50 AM GMT

    பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிமையான காரணம் கூறி நீக்கியுள்ளனர்.

    ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.


Next Story