மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் மீது வழக்கு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹெலிகாப்டர் சகோதரர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து அதில் வலம் வந்ததால் 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என அழைக்கப்பட்டனர். சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
மோசடி புகார்
இதில் கும்பகோணத்தை சேர்ந்த ரகுபிரசாத் என்பவர் தான் முதலீடு செய்த ரூ.2½ கோடியையும், மற்றொருவர் ரூ.38 லட்சத்தையும் கணேஷ், சுவாமிநாதன் தர மறுப்பதாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவரும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஹெலிகாப்டர் சகோதரர்களின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சகோதரர்களில் ஒருவரான கணேஷ் அங்குள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார்.
ரூ.6 கோடி லஞ்சம் கேட்டனர்
அந்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தனியார் லாட்ஜிற்கு சென்று அங்கிருந்த கணேசிடம், உங்கள் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மறுநாள் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் இருவரும் அதே விடுதியில் கணேசை சந்தித்து பேசினர். அப்போது உங்கள் மீதான 2 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடியும், இனிமேல் வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.6 கோடியை போலீஸ் சூப்பிரண்டு கேட்டதாக கணேசிடம் தெரிவித்தனர்.
மேலும் முதல் தவணையாக ரூ.10 லட்சம் போலீஸ் சூப்பிரண்டு கேட்பதாக இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அப்போது தனது வங்கி கணக்கில் ரூ.6 லட்சம் மட்டுமே இருக்கிறது என்றும், பணத்தை செலுத்த 5 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கணேஷ் கேட்டுள்ளார். இதையடுத்து சோமசுந்தரம் ரூ.10 லட்சத்தை 2 தவணையாக தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் வாங்கினர்
அதன்பேரில் மறுநாள் அதாவது 19-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்தி வந்த பால்பண்ணை மேலாளர் ஸ்ரீகாந்த், தஞ்சைக்கு சென்றார். அங்கு சென்ற அவரிடம் வல்லம் நம்பர்-1 சாலையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் அருகே வைத்து ரூ.5 லட்சத்தை இடைத்தரகர் ஒருவர் மூலமாக சோமசுந்தரம் வாங்கி உள்ளார். பணம் பெற்றுக்கொண்ட விவரத்தை அவர், வாட்ஸ்-அப் மூலம் கண்ணனிடம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் மறுநாள்(20-ந் தேதி) கணேசை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறிவிட்டு கோவையில் இருந்து புறப்பட்டார். பின்னர் 29-ந் தேதி மீதம் உள்ள ரூ.5 லட்சத்தை சோமசுந்தரம், கண்ணன் வாங்கினர்.
இடமாற்றம்
இந்த நிலையில் மோசடி வழக்கு தொடர்பாக கணேஷ், சுவாமிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி கைது செய்தனர். அப்போதுதான், கைதானவர்களிடம் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. உடனே அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் இந்த புகாருக்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் மீது தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சோமசுந்தரம், தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கண்ணன், திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.