வழக்குகள் அதிகரிப்பு, பணிச்சுமையால் போலீசார் தவிப்பு: வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? கிடப்பில் கிடக்கும் பரிந்துரை


வழக்குகள் அதிகரிப்பு, பணிச்சுமையால் போலீசார் தவிப்பு:  வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா?  கிடப்பில் கிடக்கும் பரிந்துரை
x

வீரபாண்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பணிச்சுமையால் போலீசார் பரிதவித்து வருகின்றனர். எனவே இந்த போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி

போலீஸ் நிலையங்கள்

தேனி மாவட்டத்தில் 31 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 5 மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. மகளிர் போலீஸ் நிலையங்கள் தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இதில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது என்பதால் அங்கு வழக்குப்பதிவு செய்யும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களை பொறுத்தவரை வீரபாண்டி, ஜெயமங்கலம், க.விலக்கு, வைகை அணை, குரங்கணி, கோம்பை, லோயர்கேம்ப், ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, மயிலாடும்பாறை, வருசநாடு, கண்டமனூர், ஹைவேவிஸ் ஆகியவை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலும், மற்ற போலீஸ் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலும் செயல்படுகின்றன. சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும் போலீஸ் நிலையங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

பணிச்சுமை

அதிலும் தேனி, அல்லிநகரம், தென்கரை போன்றவை பெரிய போலீஸ் நிலையங்கள். இவை தலா 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்கி வருகின்றன. அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பணிச்சுமை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வீரபாண்டி, க.விலக்கு, ராயப்பன்பட்டி போலீஸ் நிலையங்களில் பணிச்சுமையால் போலீசார் பரிதவிப்பதோடு, வழக்குகளும் தேக்கம் அடைந்து வருகின்றன. வீரபாண்டி போலீஸ் நிலையம், பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மற்ற விசேஷ நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் வீரபாண்டி, கோட்டூர், தர்மாபுரி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, ஜங்கால்பட்டி, உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர் உள்பட பல்வேறு கிராமப்புற பகுதிகள் என இந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பரப்பளவும் அதிகம்.

அதிக வழக்குகள்

அதுபோல், க.விலக்கு போலீஸ் நிலையம் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. க.விலக்கில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை முன்பு, பல்வேறு மரண வழக்குகள் தொடர்பாக பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்யும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்துள்ளன. அதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட ஆண்டிப்பட்டியில் இருந்து இன்ஸ்பெக்டர் வரவேண்டியது உள்ளது.

வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 315-க்கும் மேற்பட்ட வழக்குகளும், க.விலக்கில் 175-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோல் பழனிசெட்டிபட்டியில் 345-க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆண்டிப்பட்டியில் 335-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 2 இன்ஸ்பெக்டர்களை கொண்ட தேனி போலீஸ் நிலையத்தில் சுமார் 330 வழக்குகளும், அல்லிநகரத்தில் சுமார் 277 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பெரிய போலீஸ் நிலையங்களுக்கு இணையாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்படும் வீரபாண்டி மற்றும் க.விலக்கு போலீஸ் நிலையங்களை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தி கூடுதல் போலீசாரை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் தரப்பிலும் இந்த போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரையும் நிலுவையில் உள்ளது. எனவே, அரசு இந்த கோரிக்கை தொடர்பாக தனிக்கவனம் செலுத்தி இந்த போலீஸ் நிலையங்களை விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என்று போலீசாரும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story