மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போன்ற 2 பள்ளிகளில் ஆரம்ப கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை கரும்பலகையில் போட்டு காட்டும்படி கேட்டு, விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் கதைகளை கூறும்படியும் பாட்டு பாடும் படியும் கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு, முட்டை குறித்து கேட்டறிந்தார். மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் பயன்பாடின்றி உள்ள பழைய ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சோகண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு சமன் செய்திடுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அரவிந்தன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story